அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும் இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை. திண்ணை: வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப் பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று. தட்ஸ் தமிழ்: இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். வார்ப்பு: தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் ‘நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு ‘வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள ‘நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம். பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம். கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.
Continue Reading →