தொல்லியல் அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்ற சான்றுகள் ஒரு இனத்தின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு அடித்தளம் அமைக்கும் முக்கியக் கருவிகளாகும். தமிழ் இனத்தின் பண்டைய நாகரிகத்தையும், வரலாற்றையும், பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாகக் கண்டறிய தொடர்ச்சியான அகழ்வாய்வுகள் அவசியமாகின்றன. தமிழ் மக்கள் இன்று அதிகம் நிலைபெற்றிருக்கும் பகுதிகள் மட்டுமன்றி, இந்த இனம் பரவலாகச் சென்றிருக்கக் கூடிய பல்வேறு பகுதிகளிலும் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் சூழலில் தமிழ் மக்களின் வரலாறு மேலும் தெளிவு பெறும். இதன் அடிப்படையில் காணும் போது தமிழ் இனத்தின் முக்கிய வாழ்விட நிலப்பகுதியாக உள்ள தமிழகம் மட்டுமன்றி அதன் தீபகற்ப இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையிலும் அதிக அளவில் தொல்லியல் அகழ்வாய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அந்த ரீதியில் அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரை பகுதியில் யாழ் பல்கலைக்கழத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின் தலைவர் டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அகழ்வாய்வு பற்றிய செய்தியைச் சிக்காகோ நகரில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வரங்கில் ஈழத்தில் இருந்து கலந்து கொண்ட பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தார்.
இந்த அகழ்வாய்வு வட இலங்கையில் கட்டுக்கரை என்ற இடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வரங்கின் தொகுப்பில் வடஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புராதன குடியிருப்பு மையம் கட்டுக்கட்டுரையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கைத் தழிழரின் பூர்வீக வரலாறு விஜயன் வருகைக்கு முன்னர் (2500ஆண்டுகளுக்கு முன்னர்) நிலவிய பண்பாடுகளில் இருந்து தொடங்குவதை இலங்கையில் தமிழ்மக்களின் மிக நீண்ட தொடர்பினை இது உறுதி செய்வதாக அமைந்தது என்பதோடு சிங்கள மொழி உருவாக்கம் பெற்றதாகக் கருதப்படும் காலகட்டமான கிபி 6 அல்லது 7க்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிதான் இன்றைய இலங்கை என்பதை உறுதி செய்வதாகவும் அமைகின்ற ஒரு மிக முக்கியச் சான்று காட்டும் ஆய்வாகவும் இது அமைந்துள்ளதை விளக்கினார்.