அன்பிற்கினிய நண்பர் பூபதி அவர்கட்கு , நீண்ட….. நீண்ட….. காலத்திற்குப் பின்னர் தங்கள் கடிதம் படித்து நேரில் கண்டு உரையாடிய மகிழ்வடைந்தேன். “ எனத் தொடங்கும் 05-08-1999 ஆம் திகதி எழுதப்பட்ட ஒரு கடிதம் எனக்கு தபாலில் வந்திருந்தது. கனடாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியவர் எனது நீண்ட கால நண்பர் எஸ்.தி என எம்மால் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம். இவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்த காலம் 1980 களாயிருக்கலாம். அவர் எனக்கு முன்பே ஊடகத்துறையில் பிரவேசித்தவர். அவரது பெயருடன் (By line) வெளிவந்த பல முக்கியமான தலைப்புச்செய்திகளுடன் அன்றைய தினகரன் நாளேட்டினை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்திருக்கின்றேன். அவரது ஊடகப்பணிக்கு அரைநூற்றாண்டு காலம் வயதாகிவிட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் நடந்த சேவை நலன் பாராட்டுவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஊடகத்திரு ‘ எஸ்தி 50 + ‘ என்ற நூலும் கடிதங்கள் என்ற 2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது நூலும் எனது மேசையில் கணினிக்கு அருகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
‘ எஸ்தி 50 + ‘ மலர், எஸ்தியின் வாழ்வையும் பணிகளையும் பலரதும் கருத்துக்களுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது. இற்றைக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எஸ்தி எனக்கு எழுதிய கடிதம் அவரது திறந்த மனதை படம்பிடித்துக்காண்பிக்கிறது. கொழும்பில் 1980 காலப்பகுதியில் நாம் வாரம்தோறும் சந்திப்போம். அங்கு அவர் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி பல கலை, இலக்கிய ஊடகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். இச்சந்திப்புகளை பெரும்பாலும் பம்பலப்பிட்டி கிறீண்லண்ட்ஸ் உணவு விடுதியிலும் சாந்திவிஹார் உணவுவிடுதியிலும் தமிழ்ச்சங்கத்திலும் நடத்துவார். ஆழிக்குமரன் ஆனந்தன் பாராட்டு நிகழ்வு, மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் பிரிவுபசார விழா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா, பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல நிகழ்ச்சிளை அழகாக ஒருங்கிணைத்திருப்பார். இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு பாரதியார் சம்பந்தப்பட்ட பல அரிய ஒளிப்படங்களை தருவித்து காட்சிப்படுத்தி, எஸ்தி நடத்திய பாரதி நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பானது!
பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அக்காலப்பகுதியில் தினகரன் பிரதம ஆசிரியராக பணியாற்றிய ( அமரர் ) இ. சிவகுருநாதன் தலைமை தாங்குவார். அவர் சுவாரசியமான மனிதர். அவர் தலைமை தாங்கினால் சபையில் சிரிப்பொலிக்கு குறைவிருக்காது. பேச்சாளர்களையும் சபையோரையும் அங்கதச்சுவையால் அரவணைத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரையும் மறக்காமல் ‘எஸ்தியின் குருநாதர்கள் வரிசையில் ‘ எஸ்தி 50 + ‘ மலரில் படத்துடன் நினைவூட்டியிருக்கிறார்கள் மலர்க்குழுவினர். ஏனையவர்கள்: கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவன் – யாழ். ஈழநாடு ஆசிரியர் கே.பி ஹரன்.